இந்திரநீலன்

வீடு

  மேன்மையானவர்களே! கொஞ்சம் சொல்லிவிட்டுபோங்கள், எப்படிப்பட்ட வீட்டை,நான் கட்ட வேண்டும் என்று.
என் தகுதிநிலைக்கேற்ப நகரத்தில் புதிதாக முளைத்த ‘விலாஸ்’களில் வீடு கட்டலாம், ஆனால் எப்போதும் அண்டை வீட்டுக்காரர்கள் மேலும் முன்னேற சொல்லி என்னை துரத்தி கொண்டே இருப்பார்கள், சொகுசு கார்கள், பத்து பதினைந்து பூட்ஸ்கள், பங்குச்சந்தைகளில் சில இலட்சங்கள் என ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்திரநீலன்

வீடு

  மேன்மையானவர்களே! கொஞ்சம் சொல்லிவிட்டுபோங்கள், எப்படிப்பட்ட வீட்டை,நான் கட்ட வேண்டும் என்று.
என் தகுதிநிலைக்கேற்ப நகரத்தில் புதிதாக முளைத்த ‘விலாஸ்’களில் வீடு கட்டலாம், ஆனால் எப்போதும் அண்டை வீட்டுக்காரர்கள் மேலும் முன்னேற சொல்லி என்னை துரத்தி கொண்டே இருப்பார்கள், சொகுசு கார்கள், பத்து பதினைந்து பூட்ஸ்கள், பங்குச்சந்தைகளில் சில இலட்சங்கள் என ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

வீட்டிலும் ஒரு ‘ஷார்ட்ஸை’ அணிந்து கொண்டு மடிக்கணினியில் அமெரிக்க பொருளாதாரம் பற்றியோ அல்லது என்னுடைய பணி உயர்விற்காக  ‘எக்ஸ்ட்ரா வொர்க்’கையோ செய்தால் மட்டுமே என்னை 21ஆம் நூற்றாண்டின் வெற்றியாளன் என்றும் இலக்கியம் படித்தாளோ, மனைவி மற்றும் குழந்தைகளின் துணியை துவைத்தாளோ, நான் கட்டிய வீட்டின் ஒட்டடைகளை துடைத்தாளோ நான் தோற்றுப்போனவன் என்றும்,என்னால் இனி இந்த ஓட்டபந்த்யத்தில் ஓட முடியாது என ஒரு ‘வீல்சேர்’ அல்லது ‘வாக்கிங் ஸ்டிக்’ கொடுத்து மாற்றுத்திறனாளி என்ற பட்டம் கொடுத்து ஒதுக்கி விடுவார்கள்.போர் முனையில் நிற்கும் வீரனை போல,புலன்களை உச்சக்கட்ட விசையில் குவித்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

எம் சொந்தங்கள் இருக்கும் ஊரிலேயே மகிழ்ச்சியாக ஒரு வீட்டை கட்டலாம்.ஆனால், இதுதான் நம் குலவழக்கம், நம் குடும்பத்திற்கு என்று ஒரு முறை உள்ளது, அந்த ஆசாரங்களை நீ கடைபிடிக்க வேண்டும் என்பார்கள், என் மதம் மற்றும் என் சாதி அல்லாத நண்பர்களை அழைத்து வீட்டில் விருந்து வைக்க முடியாது, அவன் வீட்டிற்குள் வரும்போது இடதுகால் எடுத்து வைத்தான், அவள் என்ன ஆண்களைப்போல் ‘சட்டை’ அணிந்து இருக்கிறாள், சுத்தமான நம் வீட்டில் இப்படி வேற்று சாமியை வணங்கும் ஒருவனை அழைத்து வந்து கலங்கப்படுத்தி விட்டாயே, இறந்து போன  உன் பாட்டனார் மேலேயிருந்து இதை பார்த்து மனம் நோகுவார் என்று கூவிக்கொண்டே இருப்பார்கள்.சமத்துவத்தை பற்றி சிறு கவிதையை கூட அந்த வீட்டில் என்னால் எழுத முடியாது, எனக்கென்று அவர்கள் கொடுத்த வேடத்தில் சிறப்பாக நடித்து இறந்து போக வேண்டும்.
 
 
இப்போதிருக்கும் வாடகை வீடே போதுமானுதான், என் மனைவி,இரண்டு குழந்தைகள்,நான் என நால்வருக்கு சௌகிரியமாகவே இருக்கிறது, இந்த வீட்டிலேயே நான் இருந்து விடலாம் ‘புதுவீடு’ எதற்கு?… பத்து குடும்பங்கள் இருக்கிற இந்த பெரிய ‘மேன்ஷனில்’, எவ்வளவு நிம்மதி! யாரையும் யாரும் முந்த வேண்டியதில்லை, அனைவருக்கும் ரூபாய் பத்தாயிரம்தான் வாடகை, பால், காய்கறி, பள்ளி கட்டணம், எல்லாம் ஒன்றே அல்லவா, அவ்வளவு ஏன்,என் இஷ்ட தெய்வமான ‘பச்சையம்மனை’ விட்டுவிட்டு என் தெருமுக்கில் இருக்கும் ‘கங்கையம்மனை’ அல்லவா  வணங்க தொடங்கிவிட்டேன்! பக்கத்து வீட்டுக்காரர்கள் ராமனை வழிபடுகிறவர்களாமே, ஆனால் அவர்களும் தினமும்  அம்மனை சுற்றிவிட்டல்லவா வேளைக்கு செல்கிறார்கள், இதை சொன்னால் என் ஆசை மனைவி ”நீங்கள் வேண்டுமென்றால் இதே கூட்டிற்குள் அடைந்து மடியுங்கள் நம் பிள்ளைகளை ஏன் அடக்குகிறீர்கள்?  புதிய வீடு கட்டுவது நமக்காக அல்ல, நம் பிள்ளைகளுக்காக, அவர்கள் சுதந்திரமாக யாருக்கும் கைகட்டி பதில் சொல்லாமல் நிம்மதியாய் வாழ சொந்தமாக ஒரு வீடு கட்டுங்கள் அதுதான் குடும்ப தலைவனுக்கு ‘அழகு’  என்று கோவித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
 
என்னை கேட்டால் நான் என்ன சொல்வேன், அழுக்குகளையும், மக்களின் ஓயாத கூச்சல்களையும் வெகு தூரத்திலேயே நிறுத்தி, தன் ‘ஈர ஸ்பரிசத்தில்’ மொத்தமாக அள்ளி தூக்கிக்கொண்டு செல்லும் இந்த ஆற்றில்,நீந்திச்செல்ல  ‘உடலெனும் வீடு’ தெம்பாக இருந்தால் போதாதா? பாலைவனம் வெப்பதைக்கூட குளிர வைக்கும் ‘ஏசி’யின்   சத்தத்தை விட அதிகாலையில் தூயக்காற்றை என் மூச்சுப்பை முழுதும் நிறைத்து உயிர்கவைக்கும் ஆற்றின்  சலசலக்கும் சத்தம் எவ்வளவு இன்பம் அளிக்கிறது.
உடமைகளை உதரிவிட்டு ஆற்றில் நீந்த தொடங்கினேன் கரைமேல் நான் வீசிய உடைகளுடன் சேர்த்து என்னுடைய ‘வீடும்’ , மேகங்களுள் மறையும் நிலவென எங்கோ வெகு தூரத்தில் மங்கலாகி மறைந்து கொண்டிருந்தது.

இக்கதை/கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை writer@indhiraneelan.com -க்கு மின்னஞ்சல் செய்யலாம்

Copyright © 2026 Indhiraneelan | இந்திரநீலன்